சமக தலைவர் சரத்குமார் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

1

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறந்த தத்துவஞானி, புகழ்பெற்ற கல்வியாளர், மனிதநேய பண்பாளர் மட்டுமன்றி ஆசிரியர் பணியின் மீது கொண்ட ஈடுபாட்டால் தனது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாட விரும்பிய, முன்னாள் இந்திய ஜனாதிபதி சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் –      5 ந்தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றல்மிகு சக்தியான இளைஞர்களையும், மாணவர்களையும் செதுக்கும் சிற்பியாக ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள்.

கொரோனா சமயத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாமல் கல்வி பாதிக்கப்பட்டு எந்த அளவிற்கு வேதனையடைந்தார்களோ, அதே அளவிற்கு ஆசிரியர்களும் மாணவர்களின் கல்வி கேள்விக் குறியானதை எண்ணி வேதனையடைந்திருப்பார்கள். மாணவர்கள் அனைவரையும் தங்கள் குழந்தைகளாக எண்ணும் ஆசிரியர்கள், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பின்னடைவை சீர்செய்ய தங்களால் இயன்ற அளவிற்கு போராடி வருகிறார்கள்.

பாடத்திட்டம் கற்பித்தல் மட்டும் தமது பணி, கடமை என்றில்லாமல், ஒவ்வொரு மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளங்கண்டு, உரிய பயிற்சி அளித்து, ஊக்குவித்து, நல்லொழுக்க பண்புகள், குணநலன்கள், பல்துறை சார்ந்த பரந்த அறிவை வளர்க்க பயிற்றுவித்து நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் தாய், தந்தையருக்கு அடுத்தபடியாக மதித்து போற்றத்தக்கவர்கள்.

தன்னலமின்றி அர்ப்பணிப்போடு பணி செய்யும் அனைத்து ஆசிரியர்களையும் இன்று ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதோடு நின்றுவிடாமல், என்றென்றும் அவர்களது நல் அறிவுரைகளை ஏற்று நம் வாழ்வில் வளர்ச்சியை காண்பிப்பதே அவர்களுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய பரிசாகும். தங்கள் வாழ்வை ஆதாரமாக்கி, பலரின் வாழ்வில் ஏணியாக இருந்து, அவர்கள் முன்னேற்றத்திற்கு அடித்தளமிடும் உன்னத பணி செய்யும் ஆசிரிய பெருமக்களுக்கு, இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ரா.சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.