சக்திஸ்ரீ கோபாலனின் புதிய படைப்பு ‘நீ போதுமே’

காதலர் தினத்தன்று வெளியாகியுள்ளது

52

ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ள இசைக் கலைஞரான சக்திஸ்ரீ கோபாலனிடம் இருந்து காதலர் தினத்தன்று ஒரு சிறப்பு பாடல் வெளியாகியுள்ளது. ‘நீ போதுமே’ என்று பெயரிடப்பட்டுள்ள எளிமையான, மென்மையான இந்த தமிழ் பாப் சிங்கிள், காதலை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது.

இப்பாடலை சக்திஸ்ரீ கோபலனே எழுதி, இசையமைத்து தயாரித்துள்ளார். கிடார் கலைஞரும் பாடகருமான அக்‌ஷய் யசோதரன் இதில் தோன்றுகிறார்.

2021 பிப்ரவரி 14 அன்று வெளியாகியுள்ள ‘நீ போதுமே’, காதலில் இருப்பவர்களின் உணர்வுகளையும், காதலின் மென்மை மற்றும் வலிமையையும் இசை வடிவில் வெளிப்படுத்துகிறது. 2020-ம் வருடம் வீடுகளே உலகமாக மாறியிருந்த வேளையில் எழுதி, இசையமைக்கப்பட்ட இப்பாடல், நேசத்துக்குரியவர்களின் பாசம் குறித்து பாசாங்கில்லாமல் பதிவு செய்துள்ளது.

சிறந்த பாடகியும், இசை ஏற்பாட்டாளருமான கல்யாணி நாயரின் உணர்வுப்பூர்வமான இசைக் கோர்வைகளுடனும், ரித்து வைசாக், ஹர்ஷா சாஸ்திரி மற்றும் டோபி ஜோசப்பின் பங்களிப்புடனும் ‘நீ போதுமே’ உருவாகியுள்ளது. அக்‌ஷய் யசோதரனும் தனது கிடார் மூலாம் சிறப்பு சேர்த்துள்ளார்.

பல்வேறு மொழிகளில் 100 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள சக்திஸ்ரீ கோபாலன், ஏ ஆர் ரஹ்மான், அனிருத் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். 2008-ம் ஆண்டிலிருந்தே பாடல்களை எழுதி, இசையமைத்தும் வருகிறார்.

சென்னையை சேர்ந்த பிக் சாம் மற்றும் சென்னை ஸ்ட்ரீட் பேண்ட் ஆகிய இசைக்குழுக்களில் அங்கம் வகிக்கும் அக்‌ஷய் யசோதரன், ரஹ்மானுடன் இசைப் பயணம் மேற்கொண்ட அனுபவம் கொண்டவராவார்.

இவர்களின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள ‘நீ போதுமே’, இந்த இசை இன்னும் வேண்டுமென்று ரசிகர்களை சொல்ல வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.