படம்: சபாபதி
நடிப்பு: என்.சந்தானம், ப்ரீத்தி வர்மா, எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, வம்சி, புகழ், உமா, ரமா, வைஷ்ணவி, மதுரை முத்து
இசை: சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு: பாஸ்கர் ஆறுமுகம்
தயாரிப்பு: சி.ரமேஷ்குமார்
இயக்கம்: ஆர்.ஸ்ரீனிவாசராவ்
தமிழ் ஆசிரியர் கணபதி வாத்தியாரின் மகன் சபாபதி. இவர் திக்கி திக்கி பேசுவதால் மனம் நொந்து காணப்படு கிறார். சிறுவயதிலிருந்து உடன் படித்த சாவித்ரி மட்டும் சபாபதிக்கு ஆதரவாக பேசுகிறார். வளர்ந்த பின் இருவரும் காதல்கொள்கின்றனர். இதற்கிடையில் கணபதி வாத்தியார் வேலையிலிந்து ஓய்வு பெறுகிறார். குடும்பத்தில் வருமானம் நின்றுபோவதால் மகனை வேலைக்கு செல்ல சொல்கிறார். ஆனால் பலமுறை நேர்முக தேர்வுக்கு சென்றும் வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில் சபாதிக்கு அரசியல்வாதி ஒருவர் தவறவிடும் பெட்டி மூலம் 20 கோடி பணம் கிடைக்கிறது. அந்த பெட்டியை அரசியல்வாதியிடமே தர சபாபதி முயல்கிறான் ஆனால் விதி அவரை வேறு எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது; இதன் முடிவு என்ன? சபாதிக்கு வேலை கிடைத்ததா? அவரது காதல் நிறைவேறியதா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
வழக்கமாக நக்கலடித்து காமெடி செய்யும் சந்தானம் இப்படத்தில் சற்றுவித்தியாச மான கதாபாத்திரத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டிருக்கிறார். திக்கி திக்கி பேசும் கதாபாத்திரம் என்றாலும் அதில் ஓவர் ஆக்டிங் செய்யாமல் இயல்பாக நடித்து கதாபாத்திரத்தின் எதார்த்தம் கெடாமல் காத்திருக்கிறார்.
பார்ப்பவர்களையெல்லாம் கலாய்த்து காமெடி செய்துக்கொண்டிருந்த சந்தானம் இப்படத்தில் கலாய்பதற்காகவே தனது தந்தையாக கணபதி வாத்தியார் கதாபாத்திரத்தில் வரும் எம். எஸ்.பாஸ்கரை பயன்படுத்திக் கொண்டி ருக்கிறார். சந்தானம் செய்யும் கலாட்டாவில் எம்.எஸ்.பாஸ்கர் கதிகலங்கி போய் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் பிடிப்பதும் பம்மி பம்மி மறைந்து கொள்வதும் சிரிப்போ சிரிப்பு.
சாயாஜி ஷிண்டே அரசியல்வாதியாக வந்து உருட்டல் மிரட்டல் செய்கிறார். லொல்லுசபா சாமிநாதன் மனைவியிடம் அடிவாங்கி வடிவேலுவை ஞாபகப் படுத்துகிறார்.
ஹீரோயின் ப்ரீத்தி வர்மா அமைதியாக வந்த அழகாக காதலித்துவிட்டு செல்கிறார்.
சி.ரமேஷ்குமார் தயாரிக்க ஆர்.ஸ்ரீனிவா சராவ் கலகலப்புடன் கொஞ்சமாக சென்டிமென்ட்டையும் கலந்து விருந்து படைத்திருக்கிறார். சாம் சி எஸ் இசையில் பாடல்கள் மெல்டி மெட்டுக்களாக காதில் பாய்கிறது.
ஒளிப்பதிவாளர் பாஸ்கர் ஆறுமுகம் பணியும் சிறப்பு.
சபாபதி – சிரிப்புடன் ஊக்கம்