திரைப்பட நடிகர் சக்கரவர்த்தி மும்பையில் இன்று மாரடைப்பால் காலமானார்!

1

80-களில் தமிழ்ச் சினிமாவில் படுபிசியான நடிகராக இருந்த சக்கரவர்த்தி இன்று காலை மும்பையில் காலமானார். அவருக்கு வயது 61.

தமிழகத்தில் பெரியகுளத்தில் பிறந்தவரான சக்கரவர்த்தி 1975-களின் பிற்காலத்தில் தமிழ்ச் சினிமாவுக்குள் நுழைந்தார். முதலில் நாடகங்களில் நடித்தும் பின்பு அதிலிருந்து சினிமாவுக்குள்ளும் நுழைந்தார். சிவாஜி, ரஜினி, கமல், ராஜேஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் சக்ரவர்த்தி.

‘ஆறிலிருந்து அறுபதுவரையில்’, ‘ரிஷி மூலம்’, ‘முள்ளில்லாத ரோஜா’, ‘தர்மயுத்தம்’, ‘தூக்குமேடை’, ‘தைப்பொங்கல்’, ‘கொட்டு முரசே’, ‘நூலறுந்த பட்டம்’ உள்பட சுமார் 80 படங்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பு வாய்ப்புகள் குறைந்தபோது மும்பைக்கு சென்று குடியேறினார் சக்கரவர்த்தி. தமிழ் உச்சரிப்பில் புகழ் பெற்றவரான சக்கரவர்த்தி தனது கணீர் குரலை மையமாக வைத்து மும்பையில் டப்பிங் ஸ்டூடியோவை நிறுவினார். பல தமிழ்ப் படங்களுக்கு ஹிந்தியில் டப்பிங் செய்யும் பணியையும், ஹிந்தி படங்களுக்கு தமிழில் டப்பிங் செய்யும் பணியையும் செய்து வந்தார். பிரபல விளையாட்டு தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியில் பின்னணி குரல் கொடுத்தார். இதுதவிர தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்த வருகிறார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, உயிர் பிரிந்துவிட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் சக்ரவர்த்திக்கு லலிதா என்ற மனைவியும், சசிகுமார், அஜய்குமார் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

‘தைப்பொங்கல்’ படத்தில் இடம் பெற்ற ‘தீர்த்தக் கரைதனிலே’ பாடல் மற்றும் ‘கண் மலர்களின் அழைப்பிதழ்’ பாடலாலும் தமிழ் ரசிகர்களால் இன்றுவரையிலும் மறக்க முடியாத ஒரு நடிகராக இருக்கிறார் சக்கரவர்த்தி.

நடிகர் சக்கரவர்த்திக்கு நமது ஆழ்ந்த அஞ்சலிகள்..!

Leave A Reply

Your email address will not be published.