ரூ. 57.8 கோடி செலவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம்

எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

13

தமிழக முதல்வராக பதவி வகித்து வந்த  ஜெயலலிதா உடல் நல குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபையில் தெரிவித்தார்.

தற்போது அந்த நினைவிடம் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. இந்த நினைவிடம் 15 மீட்டர் உயரம், 30.5 மீட்டர் நீளம் கொண்டது. 43 மீட்டர் அகலமும் கொண்டது. மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை போன்ற அமைப்பில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு உள்ளது.


கட்டுமானப் பணிக்கு கூடுதல் நிதி தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு மொத்தம் ரூ.79.75 கோடிக்கு நிதியை அரசு ஒதுக்கியது. அதன் பிறகு கட்டுமானப் பணிகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.
சென்னை ஐ.ஐ.டி. நிபுணர்கள் வடிவமைத்து கொடுத்த தொழில்நுட்பங் களுடன் துபாய் நாட்டின் கட்டிடக்கலை நிபுணர்களும் இணைந்து கட்டுமானப் பணிகளை மிக நேர்த்தியாக அமைத்து வந்தனர்.
ஜெயலலிதா நினைவிட பணிகளுடன் எம்.ஜி.ஆர். நினைவிட புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த பணிகளும் சமீபத்தில் நிறைவடைந்தன.
இன்று (புதன்கிழமை) திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்தது. காலை 11 மணிக்கு திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற தொடங்கியது. இதற்காக நுழைவிட வாயலில் மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்பதற்காக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வாரிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் 10.45 மணியளவில் அங்கு வருகை தந்தனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10.55 மணியளவில் விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். முதலில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று நினைவிடத்தை திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் திறந்து வைத்தார். பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்  பிறகு எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செய்தனர்.

விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று சிறப்புரையாற்றினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து பேசினார். முடிவில் செய்தித்துறை இயக்குனர் பாஸ்கரபாண்டியன் நன்றி கூறினார். விழாவில் தமிழக  அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.