தலைவி (திரைப்பட விமர்சனம்)

3

படம்: தலைவி
நடிப்பு: கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, நாசர், தம்பி ராமையா, மதுபாலா, ஜெயஸ்ரீ, சமுத்திரக்கனி,
தயாரிப்பு:வைப்ரி மோஷன் பிக்சர்ஸ், கர்மா மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட், ஜீ ஸ்டுடியோஸ்
இசை: ஜி.வி.பிரகஷ்குமார்
ஒளிப்பதிவு: விஷால் விட்டல்
இயக்கம் : விஜய்
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படிருக்கிறது தலைவி. அவரது சிக்கலான பிரச்னைகளை தவிர்த்து அரசியல், சினிமாவில் அவர் எப்படி பிரபலமாகி வளர்ச்சி அடைந்தார் என்ற பகுதிகளை மட்டும் கவனம் செலுத்தி படத்தை இயக்கி இருக்கிறார் விஜய்.
15 வயதில் எம்ஜெஆர் படத்தில் நடிக்க வரும் ஜெயா. தன் மீது அவர் காட்டும் அன்பை காதலாக எண்ணி அவர் மீது காதல் கொள் கிறார். ஆனால் அவருக்கு அதை எம்ஜெஆர் புரிய வைக்க முயல்கிறார். ஆனாலும் ஜெயா காதலை விட மறுக்கிறார். பின்னர் அவர் காதலை ஏற்கிறார் எம் ஜெ ஆர். சினிமாவில் எம்ஜெஆர். ஜெயா இருவரும் கொடிகட்டி பறக்கின்றனர். ஒரு கட்டத்தில் எம்ஜெஆர் சினிமாவிலிருந்து தனது கவனத்தை அரசியலுக்கு திருப்புகிறார். இதனால் எம்ஜெஆர், ஜெயா உறவில் இடைவெளி ஏற்படுகிறது. ஒரு சமயம் எம் ஜெ ஆரின் கட்சி கூட்டத்தில் நடனம் ஆட வருகிறார் ஜெயா. அவரை கட்சியில் இணையும்படி எம்ஜெஆர் சொல்ல அதனை ஏற்கிறார். ஆனால் கட்சி மூத்த தலைவர்கள் சிலர் ஜெயாவை கட்சியில் சேர்ப்பதற்கும் அவருக்கு அரசியல் ரீதியாக வளர வாய்ப்பு தருவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அந்த எதிர்ப்பை கடந்து நாடாளுமன்ற எம்பி ஆகி பின்னர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு அரசியல் களத்தில் தனி ஒருத்தியாக போராடி எப்படி முதல்வர் ஆகிறார் என்பதுவரை கதை செல்கிறது.
கதை முழுவதும் ஜெயாவை சுற்றியே நடப்பதால் அவரை எதிர்த்து எந்த கதாபாத்திரம் செயல்பட்டாலும் அது வில்லன் பாத்திரமாகவே தெரிகிறது.
ஜெயலலிதா கதாபாத்திரத்துக்கு பொருத்த மான தேர்வாக வாழ்ந்திருகிறார் கங்கனா ரனாவத். உருவ ஒற்றுமை முழுவதுமாக பொருந்தாவிட்டாலும் நடிப்பு, செயல் பாடுகள், அவர் காட்டும் கோபம் எல்லாவற்றையும் தத்ரூபமாக கண்முன் நிறுத்துகிறார்.
எம்ஜெஆர், ஜெயா சினிமாவில் நடிக்கும் காட்சிகள் படமாக்கும் சீன்களில் அந்த காலத்துக்கே எம் ஜெ ஆராக நடித்திருக்கும் அரவிந்தசாமி, கங்கனாவும் ரசிகர்களை அழைத்துச் சென்றிருக்கின்றனர். பாடல் காட்சிகளின்போது படங்களில் எம்ஜிஆர் கைகள் அசைத்தும், உதட்டை கடித்தும் காட்டும் ஸ்டைல்களை அப்படியே பிரதிபலித்து அப்ளாஸ் அள்ளுகிறார் அரவிந்த் சாமி.
ஜோதிகா முழுசா சந்திரமுகியாக சந்திரமுகி படத்தில் மாறியதுபோல் கங்கனா தலைவி படத்தில் முழுசா ஜெயாவாகவே மாறி இருக்கிறார். சட்டசபையில் நடக்கும் அமளி காட்சியில் அவர் தலைவிரிகோலமாக வந்து சபதம் செய்யும் காட்சிகளில் அனல் வீசுகிறது.
ஆர் என் வி ஆக நடித்திருக்கும் சமுத்திரக்கனி எந்த காதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியாமலிருந்தாலும் அரசியல் ஈடுபாடு கொண்ட தொண்டர்கள் எல்லோருக்குமே தெரிந்த ரகசியம்தான்.
ஜெயாவாக கங்கனாவும், ஆர் என் வியாக சமுத்திரக்கனி நேருக்கு நேர் எதிர்கொள்ளும் காட்சியும் அழுத்தமானது.
கங்கனாவின் தாயாக பாலிவுட் நடிகை பாக்யஸ்ரீ, எம் ஜெ ஆர் மனைவி ஜானகியாக மதுபாலா, சசியாக பூர்ணா, கருணாவாக நாசர், ஜெயாவின் உதவியாளராக தம்பி ராமையா இயக்குனர் சொன்னதை கூடுதலும் இல்லாமல் குறைவாக இல்லாமல் கச்சிதமாக நடித்துவிட்டு சென்றிருக்கின்றனர்.


படத்தில் நடிகர், நடிகைகளுக்கு செலுத்திய அதே கவனத்தை இசை மற்றும் அரங்கங் களுக்கும் செலுத்தி இருக்கிறார் இயக்குனர். இசையில் தன்னை மூன்று காலகட்ட இசை அமைப்பாளராக மாற்றிக்கொண்டு செவிக்கு தேன் பாய்ச்சி இருப்பதுடன் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்.
அதேபோல் அரங்க அமைப்பாளர் ராமகிருஷ்ணா, மோனிகா நிகோட்ரியும் அந்தகால சினிமா செட்களை கண்முன் நிறுத்தி இருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் ரொம்ப சீனியராக இருப்பாரோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு காட்சிகளை சூழலுக்கு ஏற்ற உணவுகளுடன் படமாக்கி இருக்கிறார் இளம் ஒளிப்பதிவாளர் விஷால் விட்டல்.
அழுத்தமான காட்சிகளுக்கு அழுத்தமான வசனங்களை எழுதி தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார் மதன் கார்க்கி.
தலைவி- சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ரோல் மாடல்.

Leave A Reply

Your email address will not be published.