தண்ணி வண்டி (திரைப்பட விமர்சனம்)
படம் : தண்ணி வண்டி
நடிப்பு: உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி, தம்பி ரமையா, பால சரவணன், விதுலேகா, தேவதர்ஷினி, வினுதா லால், ஜார்ஜ், மதுரை முத்து.
இசை: மோசஸ்
ஒளிப்பதிவு: எஸ்.என்.வெங்கட்
தயாரிப்பு: ஜி.,சரவணன்
இயக்கம்: மனிகா வித்யா
தந்தையின் மீதுள்ள கோபத்தால் வீட்டை விட்டு வெளியேறும் மகாலிங்கம் நண்பருடன் சேர்ந்து தண்ணி வண்டி ஒன்றை வைத்துக்கொண்டு தேவையான இடங்களுக்கு தண்ணீரை கொண்டு சென்று கொடுத்து பிழைப்பு நடத்துகிறார். அவருக்கு தாமினி மீது காதல் பிறக்கிறது. இந்நிலையில் அந்த ஊருக்கு புதிதாக வரும் ஒரு பெண் அதிகாரி உருட்டல் மிரட்டல் செய்கிறார். மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பவர்களை அழைத்து எச்சரிக்கிறார். இந்நிலையில் பெண் அதிகாரியின் மறுபக்கம் காம லீலைகள் கொண்டதாக இருக்கிறது. அவரது இந்த பலகீனத்தை தாமினி தனக்கே தெரியாமல் அம்பலப்படுத்து கிறார். இதில் அவமானம் அடையும் பெண் அதிகாரி தாமினியையும் அதற்கு காரணமாக இருந்தவர்களையும் தீர்த்துக்கட்ட எண்ணுகிறார். இதன் முடிவு என்ன என்பதை படம் விளக்குகிறது.
மகாலிங்கம் கதாபாத்திரத்தில் உமாபதி ராமையா நடித்திருக்கிறார். நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதி படத்திலும் அவரது மகனாகவே நடித்திருக்கிறார். தன்னை ஹீரோவாக நிலைநிறுத்த தேவையான தகுதிகளை உமாபதி வளர்த்துக்கொண்டிருக்கிறார். பால சரவணனுடன் சேர்ந்துக்கொண்டு அவர் செய்யும் இயல்பான காமெடியும் சரி, தனது காதலியை கடத்திய கூட்டத்துடன் மோதும் அதிரடியான சண்டை காட்சியாக இருந்தாலும் சரி நிறைவாக செய்திருக்கிறார்.
தாமினியாக வரும் சம்ஸ்கிருதிக்கு அதிக வேலை இல்லையென்றாலும் கொடுத்த வேலையை எதார்த்தமாக செய்திருக்கிறார். படத்தில் வில்லனுக்கு பதில் வில்லிதான் முக்கிய பங்காற்றியிருக்கிறார். பெண் அதிகாரியாக வந்த வில்லன்கள் செய்யும் வேலையை தடாலடியாக செய்து மிரட்டுகிறார். பார்வையில் காட்டும் முறைப்பும், தோற்றத்தில் காட்டும் விரைப்பும் அசல் வில்லியாக அதேசமயம் அழகான வில்லியாக கண்முன் நிற்கிறார் வினுதா லால்.
ஜி.சரவணன் தயாரித்திருக்கிறார். மனிகா வித்யா படத்தை கமர்ஷியல் அம்சங்களுடன் இயக்கி உள்ளார். மோசஸ் இசை ஓ கே ரகம். ஒளிப்பதிவாளர் எஸ்.என்.வெங்கட் ஒளிப்பதிவு நேர்த்தி.
தண்ணி வண்டி – கலகலப்பு வண்டி.