ஓடிடி தளத்திற்கு படம் தயாரிக்கிறது ஏவிஎம் நிறுவனம்

1

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் நிறுவனம் காலத்திற்கு ஏற்ப பல மாறுதல்களை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருகிறது. படங்கள் தயாரித்த நிறுவனம் அதன் பிறகு சின்னத்திரை சீரியல்களை தயாரித்தது. இசை ஆல்பங்கள், சிறப்பு திரைப்படங்கள் தயாரித்தது. இப்போது அடுத்த கட்டமாக ஓடிடி பிளாட்பாரதிற்கென்று படம் தயாரிக்கத் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 75 ஆண்டுகளுக்கு மேலாக தரமான கதையம்சம் உள்ள படங்கள் மூலம், திரையுலகில் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, ஏவிஎம் புரொடகஷ்ன்ஸ் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை மக்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

புத்தம் புதிய, புதிரான, திரில்லர் கதைக்களம் கொண்ட தமிழ் ஸ்டாக்கர்ஸ் என்ற இப்படைப்பை டைரக்டர் அறிவழகன் இயக்க உள்ளார். தமிழ் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்பட திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு அதன் யதார்த்தங்களை சுவைபடச் சொல்லும் இந்த தொடரின் மூலம் தன் ஓடிடி பயணத்தை தொடங்குகிறது.

ஒரு படைப்பை சட்டவிரோதமாகவும், அங்கீகாரம் இல்லாமலும் நகல் எடுப்பது பெரும் குற்றம் மட்டுமின்றி, படைப்புத்திருட்டு என்பது, உலகெங்கும் உள்ள படைப்பாளர்களின் பெரும் கவலைகளில் ஒன்றாகும். இந்தியாவில், தமிழ் திரையுலகம், பல்வேறு ஆன்லைன் திருட்டு வலைத்தளங்களின் காரணமாக இந்த பிரச்சினையுடன் முடிவில்லாத போரை நடத்தி வருகிறது.

இந்தக் கதை அந்த திருட்டு உலகின் இருண்ட பக்கத்தை ஆழமாக சென்று காட்டுகிறது. மேலும் திருட்டு உள்ளடக்கத்தை வெளியிடுவதில் ஈடுபட்டுள்ள குழுவை அடையாளம் காட்டுவதற்கு திரைத்துறையின் தொடர்ச்சியான போரை பற்றியும் சொல்கிறது. பொழுது போக்குகாக மட்டும் இன்றி அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவிஎம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறையான அருணா குகன், அபர்ணா குகன் ஷாம், ஆகியோர் இதனை தயாரிக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.