நடிகர் திலகத்துடன் தேர்தல் பிரச்சாரம் சென்று வந்த பத்திரிக்கையாளர் அவரின்  சுபாவம் பற்றி சுவைபட பகிர்ந்து கொள்கிறார்

9

சிவாஜி கணேசனுடன் தேர்தல் சுற்றுப்பயணம் போனபோதும் இதேவிதமான அனுபவம். தமிழக முன்னேற்ற முன்னணி என்கிற கட்சியை அவர் அப்போது துவக்கியிருந்தார்.

துக்ளக் பத்திரிகை சார்பில் அவருடன் தமிழ்நாடு முழுக்கப் பல நகரங்களுக்கு அவர் பயணப்பட்டபோது அவருடன் மூன்று நாட்கள் கூடவே போனேன்.

முன் சீட்டில் சிவாஜி. பின் சீட்டில் அவருடைய உதவியாளர், சிவாஜி ரசிகர் மன்றத் தலைவரான ராஜசேகரன், அடுத்து நான்.

காரில் ஏறுவதற்கு முன் “என்னப்பா… அந்தப் பய அனுப்பிச்சானா?” என்றார் ஆசிரியர் சோ-வைக் குறிப்பிட்டு.

கதர் வேட்டி, கதர்ச் சட்டை. கழுத்தில் தங்கம் இழையோடும் ருத்திராட்சக் கொட்டை. தோளில் வெள்ளைத் துண்டு. திருச்சி, மதுரை என்ற போகிற இடங்களில் எல்லாம் நல்ல கூட்டம். ரசிகர்களை “நம்ம பிள்ளைகள்” என்று பிரியத்துடன் கூப்பிட்டார்.

பல இடங்களில் மிக எளிமையாக நேரடியாக சகஜமாக உரையாடுகிற மாதிரி தான் மேடைகளிலும் பேசினார். மேடைக்கென்று தனியாக ஒரு மொழியை அவர் உருவாக்கிக் கொள்ளவில்லை. போகும்போது சொன்னார். “நேரில் ஒண்ணு.. மேடையில் ஒண்ணுன்னு பேசுறதில்லைப்பா.. நமக்கு அப்படி இருக்க முடியலை..”

தூத்துக்குடியில் மாலை ஆறு மணிக்குக் கூட்டம். ஐந்தரை மணிக்கே தங்கியிருந்த ஹோட்டலில் பரபரக்க ஆரம்பித்து விட்டார். படப்பிடிப்பில் சரியான நேரத்திற்குப் போவது மாதிரி கூட்டத்திற்கும் சரியான நேரத்துக்குப் போக வேண்டும் என்கிற துடிப்பில் இருந்தார்.

“அண்ணே… இப்போ போனா நல்லாருக்காதுண்ணே… இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சுப் போனாத் தான் நல்லாயிருக்கும்ண்ணே”

-கட்சிக்காரர்கள் அவரிடம் சொன்னபோது, சத்தம் போட்டார் சிவாஜி.

“நமக்கு ஒரு வேலை இருக்கிற மாதிரி கூட்டத்திற்கு வந்திருக்கிறவன் ஒவ்வொருத்தனுக்கும் ஒரு வேலை இருக்கும்லே.. நாம கூட்டம் முடிஞ்சு நம்ம வேலையைப் பார்க்கிற மாதிரி ஆளுக்காள் பார்ப்பாங்க.. இல்லே.. எதுக்கு அவங்களை வீணாக் காக்க வைக்கணும்?” என்று எந்த விதமான பகட்டும் இல்லாமல் சொன்னவர் சரியான நேரத்திற்குக் கூட்டத்திற்குக் கிளம்பி விட்டார்.

மாலை ஆறு மணி என்று சொல்லிவிட்டு அப்போது இரவு ஒரு மணி வரை மக்களைக் காக்க வைத்து அதன் பிறகே பல தலைவர்கள் வந்து கொண்டிருந்த நிலையில், சிவாஜியின் இந்த இயல்பு கூடச் சென்றிருந்த எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

கூட்டம் முடிந்து தூத்துக்குடியில் தங்கியிருந்த அறைக்குப் போனோம். சின்ன டேபிளில் சாப்பிட உட்கார்ந்தோம். அவருடைய ரசிகர்கள் (மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்) வீட்டில் சமைத்து பெரிய கேரியரில் எடுத்து வந்திருந்தார்கள்.

சாப்பாடு சுடச்சுட பரிமாறப்பட்டது. விதவிதமான அசைவ உணவுகள்.

பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம் கேட்டார்.

“இறால் சாப்பிடுவே இல்லை..”

“சாப்பிட்டுப் பழக்கமில்லை..”

“நான்வெஜ் சாப்பிடுறவன் தானே..?”

தலையாட்டியதும் ”பாரு.. நம்ம பிள்ளைக எவ்வளவு ஆசையாச் சமைச்சு எடுத்துட்டு வந்திருக்காங்க.. சாப்பிடு.. இறாலைப் பாரு.. எவ்வளவு பெரிசா இருக்குன்னு.. இதெல்லாம் ஏற்றுமதிச் சரக்கு.. சாமானியமா இங்கே கிடைக்காதுப்பா” என்று சொன்னபடி எனக்கும் பரிமாறச் சொன்னார்.

அப்போது எதிரே இறாலை அவர் சுவைத்துச் சாப்பிடுவதைக் கவனித்தேன். ‘முதல் மரியாதை’ படத்தில் ராதாவுக்கு முன்னால் மீனை அப்படியொரு ரசனையுடன் சாப்பிடுவாரே – அந்த மாதிரி இறாலைப் பதமாகப் பிடித்து மெதுவாகக் கடித்து, அதன் சுவையை முழுக்க உள்வாங்கிய மாதிரி ரசித்துச் சாப்பிட்டபோது அவருடைய முகபாவங்கள் பரவசமாக இருந்தன.

பல நடிகர்களைப் பற்றிப் பயணத்தின்போது பேசிக்கொண்டே வந்தவரிடம் கமலைப் பற்றிப் பேசும்போது தனிப்பூரிப்பு.

“அவன் கிட்டே வேகம் இருக்கு.. நல்லா பண்றான்.. அவன் என் தோளுக்கு மேலே இருந்து சினிமாவைப் பார்க்குறான்..” -சொல்லும்போது தோளுக்கு மேலே கையை உயர்த்தியிருந்தார்.

“அப்போ எனக்குத் தெரியாத உயரம் அவனுக்குத் தெரியும். நாளைக்கு அவன் தோளில் ஏறக்கூடிய ஒருத்தனும் வருவான். ஒருத்தனோட திறமையை யாரும் ரொம்ப நாளைக்குப் பொத்தி வைக்க முடியாது… இது என் வாழ்க்கையில் நடந்திருக்கு.

தீவிரமா முயற்சிக்கிறவங்க யாரா இருந்தாலும் இது கண்டிப்பா நடக்கும். என்ன.. காலத்தில் முன்னே.. பின்னே நடக்கும். அதுக்குப் பொறுமையாக் காத்திருக்கத் தெரியணும்..”

தனக்கு அனுபவங்கள் கொடுத்த பாடத்துடன் சில விஷயங்களை எளிமையாகச் சொல்லிக் கொண்டு வந்தார்.

திருவண்ணாமலையில் கூட்டம் முடிந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தோம். நள்ளிரவு ஒன்றரை மணி இருக்கும். வழியில் சாலையோரத்தில் ஒரு டீக்கடை. பார்த்ததும் காரை நிறுத்தச் சொன்னார்.

எதிரே இருந்த கடைக்குச் சாலையைக் கடந்து போனார். நாங்களும் போனோம். அவரைப் பார்த்ததும் பதறவே ஆரம்பித்து விட்டார் டீக் கடைக்காரர்.

அந்த இரவு நேரத்தில் அழுத்தமான குரலில் சொன்னார்.

“தம்பீ.. சுடு தண்ணீ இருக்குல்லே.. அதிலே கிளாசை நல்லாக் கழுவிட்டு ஸ்ட்ராங்கா எங்களுக்கு டீயைப் போடு..”

மறுநாள் சென்னைக்குத் திரும்பி அவருடைய அலுவலகத்தில் சிவாஜியைப் பேட்டி எடுத்த பிறகு அன்னை இல்லத்துக்குச் சாப்பிட அழைத்துப் போனார். மதிய நேரம். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் சைவச் சமையல். உணவு பரிமாறிய மனைவி கமலாம்மாளிடம் அறிமுகப்படுத்தினார்.

“இப்படி ஒல்லியா இருந்தா உடம்பு எப்படித் தேறும்? இந்த வயசுக்கு நல்லாச் சாப்பிட வேணாமா? இவனுக்குக் கீரை வைங்க.. கீரையை அடிக்கடி சேர்த்துக்கப்பா.. இத்தனை நாள் எங்க கூட வந்ததிலே சந்தோஷம். கூட வந்து பார்த்திருக்கே.. உனக்கு என்ன தோணுதோ அதை எழுது..”

சிறந்த நடிகர் என்கிற பிம்பத்தை விட, சக மனிதராகப் பழகிய அந்தக் கணங்கள் ஒரு நல்ல சினிமாவைப் போல மனதில் பதிந்திருக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.