தேள் (திரைப்பட விமர்சனம்)

30

படம் : தேள்

நடிப்பு: பிரபுதேவா, சம்யுக்தா ஹேக்டே, ஈஸ்வரிராவ், யோகிபாபு

இசை: சத்யா

ஒளிப்பதிவு: விக்னேஷ் வாசு

தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜாஇயக்கம்: ஹரிகுமார்

கோயம்பேட் மார்க்கெட்டில் வட்டிக்கு ரவுடியிடம் கடன் வாங்கியவர்களிடம் வசூல் செய்யும் அடியாளாக இருக்கிறார் பிரபுதேவா. அனாதைபோல் தனியாக சுற்றிக் கொண்டிருந்த அவரை தேடி வரும் ஈஸ்வரிராவ் ”நான் தான் உன்னுடைய அம்மா” என்று சொல்கிறார். அதை ஏற்காத பிரபுதேவா அவரை அடித்து விரட்டுகிறார். ஆனாலும் விடாப்பிடியாக அவரை பின்தொடர்ந்து பாசம் காட்டுகி றார். ஒரு கட்டத்தில் அவரை அம்மாவாக ஏற்கிறார். இதனால் பிரபுதேவா கடன்காரர்களிடம் வசூல் வேட்டைக்கு போகாமல் அம்மா பாசத்தில் கட்டுப்பட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஈஸ்வரி ராவ் காணாமல் போகிறார். கோபம் அடையும் பிரபுதேவா வட்டிக்கு விடும் ரவுடிதான் தன் அம்மாவை கடத்தி இருக்க வேண்டும் என்று தட்டிக் கேட்கிறார். ஆனால் அவர்கள் கடத்தவில்லை என்று தெரிகிறது. அப்போது எதிர்பாராத திருப்பம் ஒன்று நடக்கிறது. அது என்ன என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

நடனப்புயல் பிரபுதேவாவுக்கு முற்றிலும் வித்தியாசமான ஆக்‌ஷன் பாத்திரமாக இப்படத்தில் அமைந்திருக்கிறது.  இவ்வளவு ஆக்‌ஷன் பிரபுதேவா செய்வாரா என்று ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சர்யப்பட வைக்கிறார்.

வட்டி தராதவர்களை ரோட்டில் ஓடவிட்டு அடித்து துவைப்பதும் வீட்டுக்குள் புகுந்து தாக்குவதுமாக அசல் ரவுடியாகவே மாறியிருக்கிறார் பிரபுதேவா.

அம்மா சென்டிமென்ட் சொல்லிக் கொண்டு தன்னிடம் வரும் ஈஸ்வரிராவை கன்னத்தில் பளார் அறை விடும்போது திடுக்கிட வைக்கிறார் பி.தேவா. பின்னர் அவர் காட்டும் பாசத்தில் உருகி தாயின் அரவணைப்பில் கண்ணீர் மல்க அடங்கிப் போகும்போது நெகிழ வைக்கிறார்.

பிரபுதேவாவின் அம்மா கதாபாத்திரத்தில் வரும் ஈஸ்வரிராவ் ஒரு சஸ்பென்ஸ் கேரக்டராக உலா வருவது கதைக்கு பலம். அவர் யார் என்பது தெரியவரும்போது கதையின் திருப்புமுனையாக மாறிவிடுகிறார்.

பிரபுதேவாவுக்கு பதிலாக ஹீரோயின் சம்யுக்தா ஹெக்டெ நடனப் புயலாக மாறி இருக்கிறார். பிரபுதேவா ஆட வேண்டிய ஆட்டத்தையெல்லாம் சேர்த்து இவரே ஆடி நடனம் இல்லை என்ற குறையை போக்கி விடுகிறார்.

யோகிபாபு ஒரு சில காட்சிகள் வந்தாலும் காமெடி பஞ்ச் பேசி சிரிக்கவைக்கிறார். சத்யா இசையும் ஒ கே.

விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு காட்சிகளுக்கு ஏற்ப சுழன்று விறுவிறுப்பை கூட்டுகிறது.

நடிகர் ஹரிகுமார் இயக்குனராக மாறி பிரபுதேவாவை வித்தியாசமான கோணத்தில் கையாண்டிருக்கிறார். அவரது கணிப்பை கச்சிதமாக நிறைவு செய்திருக்கிறார் பிரபுதேவா.

தேள் – ஆக்‌ஷனுடன் கூடிய அம்மா சென்டிமென்ட் கதையில் ஒரு சஸ்பென்ஸ்.

Leave A Reply

Your email address will not be published.