படம்: தீனி
நடிப்பு: அசோக்செல்வன், தாரா, நித்யா மேனன், நாசர், சத்யா, டெம் க்ளோக், கேவிம் மக்ராத், கேதர் ஷ்ங்கர், பிரம்மாஜி
இசை: ராஜேஷ் முருகேசன்
ஒளிப்பதிவு: திவகர்மணி தேவாம்சம்
தயாரிப்பு: பி.வி.எஸ்.என் பிரசாத்
இயக்கம்: அனில் ஐ.வி.சசி
ஷெஃப் ஆக வேலை பார்க்க லண்டன் வருகிறார் அசோக் செல்வன். நாசர் நடத்தும் கிட்சன் ரெஸ்டாரண்ட்டில் வேலைக்கு சேர்கிறார். வழக்கமாக அங்கு செய்யும் பர்கர், மீன், சிக்கனை தனது பாரம்பரிய பாணியில் செய்து நாசரிடம் நல்ல பெயர் வாங்குகிறார் அசோக் செல்வன். அடிக்கடி உடல் தூக்கி போட்டு அதிர வைக்கும் அவர் அதற்கு காரணம் தனக்கு இருக்கும் நோய்தான் என்கிறார். ஆனால் அதற்கு காரணம் இறந்துபோன அவரது காதலி நித்யா மேனன் என்று தெரியவருகிறது. இவர்கள் காதல் மலர்ந்தவிதம், ரெஸ்டாரண்ட்டில் பணி புரியும் தாராவுக்கு அசோக்கிற்கும் மலரும் காதல் என இருவித காதல் கதையை படம் பேசுகிறது.
எப்போதும் டிப் டாப்பாக தோன்றும் அசோக் செல்வன் இப்படத்தில் சற்று உருவமாறி இருக்கிறார். தொந்தியும், குண்டான அவரது தோற்றமும் வேறுபடுத்தி காட்டுகிறது. தோற்றம் எப்படி இருந்தாலும் நடிப்பில் அளவு மிகாமல் கவர்கிறார். சில இடங்களில் அவரது நடிப்பில் கமலின் சாயல் தெரிகிறது.
நாசர் தலைமை ஷெப்பாக வந்து அசத்துகிறார். நிஜ ஷெஃப்கூட தோற்றுவிடும் அளவுக்கு நடிப்பில் ஒளி வீசுகிறார். அசோக் செல்வன் சமைத்ததை நா மணக்க ருசிபார்க்கும் பாவனையில் ஸ்கோர் செய்கிறார். தாரா ஒரு சஸ்பென்ஸ் கேரக்டராக வந்து அவர்தான் நாசர் மகள் என்பது தெரியவரும்போது ஆச்சர்யப்படுத்துகிறார்.
அசோக் செல்வன், தாரா ஃப்ரீஸரில் சிக்கிக் கொள்ளும் காட்சி சில நிமிடங்களே என்றாலும் அகில் ஒரு திருப்பத்தை வைத்திருக்கிறார் இயக்குனர். அசோக் செல்வன் நித்யா மேனன் பிளாஷ்பேக் காதல் ரம்யமாக பரவுகிறது. ஒரு இடத்தில் நிற்காமல் மான்போல் ஓடி ஆடி அவர் செய்யும் குறும்புகள் ரசிக்க வைக்கிறது. விபத்தில் இறந்த பிறகும் ஆவியாகி அசோக் செல்வனை விடாமல் தொடர்கிறார். பேய் சமாச்சார காதல் என்றாலும் பழி வாங்கல், திடீர் அதிர்ச்சி என்பதற்கு இடம் தராமல் காதலின் மேன்மையை உணர்த்துகிறார் இயக்குனர்.
லண்டன் காட்சிகளை திவாகர் மணி தேவாம்சம் ரம்யமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ராஜேஷ் முருகேசன் மெல்லிசையாக தவழ்கிறது.
இயக்குனர் அனில் ஐ வி சசி காதல் கதையை அன்பாக பரிமாறியிருக்கிறார்.
தீனி- பக்குவ காதல்.