படம்: தீர்ப்புக்கள் விற்கப்படும்
நடிப்பு: சத்யராஜ், யுவன், ஸ்மிருதி வெங்கட், மதுசூதனன், ஹரிஸ் உத்தமன், சார்லி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, ஜார்ஜ், சூப்பர்குட் சுப்ரமணி,
இசை: பிரசாத் எஸ்.என்.
ஒளிப்பதிவு: கருடசேவா ஆஞ்சி
தயாரிப்பு: சி.ஆர்.சலீம்
வெளியீடு : 11:11 புரொடக்ஷன்ஸ் பிரபு திலக்
இயக்கம்: தீரன்
டாக்டர் நலன்குமார் தன் மகள் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார். அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்க எண்ணுகிறார். இந்நிலையில் மகளுக்கு அவள் விரும்பியவுடனே திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு கணவனும் மனைவியும் வெளிநாடு சென்று படிக்க முடிவு செய்கின்றனர். இந்நிலையில் நலன் மகளை எம் எல் ஏ மகன் மற்றும் அவரது நண்பர்கள் மானபங்கப்படுத்துகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மகளை மானபங்கப் படுத்தியவர்களை கோர்ட்டில் நிறுத்தி நீதி கேட்கிறார் நலன். ஆனால் தீர்ப்பு எதிரிகளுக்கு சாதமாக வருகிறது. கோபம் அடைந்த நலன் , எம் எல் ஏ மகனின் ஆணுறுப்பை அறுத்து ஆளை மட்டும் உயிரோடு விடுகிறார். ஆணுறுப்பை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு வந்து கொடுத்தால் எம் எல் ஏ மகனின் ஆண்மையை மீட்கலாம் என்று டாக்டர்கள் சொல்ல மகனின் உறுப்பை கேட்டு டாக்டர் நலனை தேடுகிறார் எம் எல் ஏ. அவரிடம் கோடிகள் கேட்டு பெறும் நலன் பின்னர் ஒவ்வொரு இடமாக அலைய விடுகிறார். இறுதியில் நடந்தது என்ன என்பதை படம் எதிர்பாராத திருப்பங்களுடன் விளக்குகிறது.
டாக்டர் நலன்குமார் என்ற பக்குவப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் சத்யராஜ். மகள் மீது அவர் காட்டும் பாசம் பின்னர் எதிரிகள் மீது துப்பாக்கி குண்டுகளாக பாயப்போகிறது என்பதை கணிக்க முடியவில்லை.
பெண்ணை மானபங்கப்படுத்துவது அதற்காக பழிவாங்குவது என்று பல கதைகள் வந்து விட்டன. அதேசாயல் கதை என்றாலும் சொல்லப்படும் விஷயங்களும், காட்சி அமைப்புகளும் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
மகளுக்காக நீதி கேட்டு போராடி கிடைக்காததால் சத்யராஜே பழி வாங்கும்போக்கை கையில் எடுப்பதும் அதை வித்தியாசமான முறையில் செயல்படுத்துவதும் கதைக்கு பலம். அடியாட்களுடன் சத்யரஜை கொல்ல வரும் எம் எல் ஏ மதுசூதனின் கோபத்தை தனக்கு சாதகாமாக்கி அதே அடியாட்கள் மூலம் அவர்களுக்குள்ளேயே மோதலை உருவாக்குவதும் கடைசியில் மதுசூதனனை வைத்தே அவரது மச்சானை கொல்ல வைப்பதுமாக சத்யராஜ் அரங்கேற்றும் பழிவாங்கும் படலம் புத்திசாலித்தனமாக கையாளபட்டிருக்கிறது.
முழுகதையையும் சத்யராஜ் சண்டை போடாமல், துப்பாக்கி எடுக்காமல் ஆனால் ஆக்ஷன் ஹீரோ போல் தாங்கி நிற்கிறார்.
அல் தாரி மூவிஸ் சி.ஆர் சலீம் வழங்க 11:11 புரடக்ஷன்ஸ் டாக்டர் பிரபு திலக் வெளியிட்டுள்ள இப்படத்தை எழுதி இயக்கி உள்ளார் தீரன். தீர்ப்புகள் விற்கப்படும் என்று துணிச்சலாக தலைப் புவைத்ததுபோல் காட்சிகளையும் துணிச்சலாக சொல்லி இருக்கிறார்.
கருடவேகா ஆஞ்சி ஒளிப்பதிவு படத்துக்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. பிரசாத் எஸ்.என். இசை காட்சிகளை மேம்படுத்தி இருக்கிறது.
தீர்ப்புகள் விற்கப்படும் – தைரியமான முயற்சி.