இப்பத்தான் நடிக்க கத்துக்கறேன் – விஜய் சேதுபதி

15

திரையுலகிற்கு வந்து, 10 ஆண்டுகள் ஆகியுள்ளது பற்றி, பிரபல நடிகர் விஜய்சேதுபதி: கடந்த, 2009, டிச., 24. குறும்படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போ, ‘அப்பாவுக்கு உடம்பு முடியலை. ‘உடல் சில்லுன்னு ஆகிடுச்சு’ன்னு அம்மாகிட்ட இருந்து போன். எனக்கு அன்னைக்கு நிலை கொள்ளலை. மறுநாள் அப்பா இறந்துட்டதா, டாக்டர் உறுதிப்படுத்திட்டார். என்னோட முதல் படம், அதே டிசம்பர் 24, அடுத்த வருஷம் வெளியானது. 10 ஆண்டுகள் ஆனாலும், இப்போ தான் சினிமாவைக் கத்துக்கிட்டிருக்கேன். அதனால, பத்து வருஷம்கிறதை பெரிசாப் பார்க்கலை; கொண்டாடவும் விரும்பலை.

இப்போ தான் கதாபாத்திரமெல்லாம் புரிய ஆரம்பிக்குது; அறிவு வந்திருக்கு. இன்னும் ஆழமா வேலை பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். என் ரசிகர்களும் இந்தப் பத்தாம் ஆண்டை கொண்டாடணும்னு சொன்னாங்க.’வேண்டாம்டா, இதைக் கொண்டாடிட்டா மனசு திருப்தி அடைஞ்சிரும். நான் திருப்தி அடைய விரும்பலை’ன்னு சொல்லிட்டேன். சும்மா, ‘டயலாக்ஸ்’ பேசிச் சிரிச்சா நடிப்புன்னு சில பேர் நினைக்கிறாங்க; ஆத்மார்த்தமா மனிதர்களைத் தொடுறது தான் நடிப்பு. அதைத்தான் பழகிக்கிட்டிருக்கேன்.

இந்த தேர்தலை மிக முக்கியமான தேர்தலாகப் பார்க்குறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, மக்கள் மனசுல இடம் பிடிக்குறதுக்கு, நிறைய பேர் நிறைய வேலைகள் செஞ்சிருக்காங்க. அவங்கவங்களுக்கு ஒரு, ‘ஐ.டி., விங்’ வெச்சிக்கிட்டு, சமூக வலைதளங்களில் செய்தியைப் பரப்புறதையே தொழிலா வெச்சிக்கிட்டு இருக்காங்க.’என்ன வேணும்னாலும் சொல்லி மக்களை மயக்க முடியும், எதை வேணும்னாலும் நம்ப வைக்க முடியும்’னு நிறைய முயற்சிகள் எடுத்திருக்காங்க. அந்த முயற்சிகளின் பலன் என்னன்னு இந்தத் தேர்தல் தான் சொல்லும்னு நம்புறேன்.

கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தப்போ மக்கள் இவ்வளவு துாரம் அரசியலைக் கூர்ந்து கவனிக்கலைன்னு நினைக்கிறேன். ஏன்னா, ‘அவங்க எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க’ அப்படிங்கிற நம்பிக்கை இருந்தது. ஆனா, இந்த அஞ்சு வருஷத்தில் மக்கள் எல்லாத்தையும் ரொம்ப கூர்ந்து கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்க.

தேர்தலில் மக்களுடைய மனநிலை என்னன்னு தெரிஞ்சிக்குற ஆர்வத்துல இருக்கேன். நானும் எல்லாத்தையும் கூர்ந்து கவனிக்குறேன்.ரஜினி சார்க்கு நன்றி சொல்ல விரும்புறேன். வருவாரா, வர மாட்டாரான்னு ரொம்ப நாளா இருந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வெச்சதுக்கு நன்றி. மத்தபடி அரசியலுக்கு வருவதும், வராததும் அவரின் தனிப்பட்ட விஷயம். அதைப் பற்றிக் கருத்து சொல்ல, எனக்கு எந்த உரிமையும் இல்ல!

Leave A Reply

Your email address will not be published.