தமிழ் நாடக வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ‘அவ்வை’ டி.கே.சண்முகம்பிறந்த தினம் இன்று

0

ஆறு வயதில் மேடை ஏறினார். இவரது நடிப்புத் திறனைக் கண்ட சங்கரதாஸ் சுவாமிகள், ‘அபிமன்யு சுந்தரி’ நாடகத்தில் அபிமன்யுவாக நடிக்க வைத்தார். சதாவதானம் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், எம்.கந்தசாமி முதலியாரிடமும் நடிப்புப் பயிற்சி பெற்றார். தொடர்ந்து பல நாடகங்களில் நடித்தார்.

பத்து வயதில் ‘மனோகரா’ வேடத்தில் இவரது நடிப்பைப் பார்த்து ‘நாடகத் தந்தை’ பம்மல் சம்பந்தனார் பெரிதும் வியந்து பாராட்டினார். இவரது வசன உச்சரிப்பும், தோற்றப் பொலிவும் சேர்ந்து அந்த கதாபாத்திரத்தையே கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் என்று பாராட்டப்பட்டார்.

வயதுமுதிர்ந்த சித்தர், மதுரகவி, அவ்வையார் ஆகிய பாத்திரங் களில் சிறுவயதிலேயே அபாரமாக மிளிர்ந்தார். அவ்வையார் வேடத்தில் ஜொலித்ததால் ‘அவ்வை’ சண்முகம் என்றே அழைக் கப்பட்டார். இவரும் சகோதரர்களும் இணைந்து 1925-ல்  பால சண்முகானந்த சபா என்ற நாடகக் குழுவைத் தொடங்கினர்.

அடுத்த 25 ஆண்டுகளில் இக்குழு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலும் ஏராளமான நாடகங்களை நடத்திப் புகழ்பெற்றது. இக்குழு மூடப்பட்ட பிறகு, டிகேஎஸ் நாடகக் குழு என்ற பெயரில் புதிய நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றி நடித்தார்.

இவரது நாடகங்கள் தேசபக்தியைத் தட்டி எழுப்பின. சமூக மறுமலர்ச்சியையும் பிரதிபலித்தன. இவரது ‘தேசபக்தி’, ‘கதரின் வெற்றி’ ஆகிய நாடகங்களை ஆங்கிலேய அரசு தடை செய்தது. ‘மேனகா’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘மனிதன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது முயற்சியால் 1950-ல் நாடகக் கழகம் தொடங்கப்பட்டது. அதன் முதல் தலைவராகச் செயல்பட்டார். இவரது முயற்சியால் நாடகத்துக்கான கேளிக்கை வரிக்கு விலக்கு கிடைத்தது. ‘நடிகன் குரல்’ மாத இதழின் பொறுப்பாசிரியராக 3 ஆண்டுகள் செயல்பட்டார்.

சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கப் பொருளாளர், சங்கீத நாடக சங்கம், டெல்லி சங்கீத நாடக அகாடமியின் செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். நல்ல இசை ஞானம் கொண்டவர். சங்கரதாஸ் சுவாமிகளின் கீர்த்தனைகள், பாரதியாரின் பாடல்களைப் பாடி நடித்தார். தமிழக சட்ட மேலவை உறுப்பினராக 1968-ல் நியமிக்கப்பட்டார்.

கோலாலம்பூரில் 1966-ல் முதலாவது உலகத் தமிழ் மாநாட்டில் ‘தமிழ் நாடக வரலாறு’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வழங்கினார். நாடகம், திரைப்படம் தொடர்பாக ஏராளமான கட்டுரைகள் எழுதினார். ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’, ‘நாடகக் கலை’, ‘நெஞ்சு மறக்குதில்லையே’, ‘எனது நாடக வாழ்க்கை’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பாரதியாரிடம் அளவுகடந்த பற்றும் மதிப்பும் வைத்திருந்தார். முத்தமிழ் கலாவித்வ ரத்தினம், நாடக வேந்தர், நடிகர் கோ, பத்ம, சிறந்த நாடக நடிகர் விருது என ஏராளமான பட்டங்கள், விருதுகளைப் பெற்றவர். அரை நூற்றாண்டுக்கு மேல் நாடகத் துறையில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்ந்த ‘அவ்வை’ டி.கே.சண்முகம் 61-வது வயதில் (1973) மறைந்தார்.

Leave A Reply

Your email address will not be published.