துக்ளக் தர்பார் (திரைப்பட விமர்சனம்)

4

படம்: துக்ளக் தர்பார்
நடிப்பு: விஜய் சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் (கெஸ்ட் ரோல்), கருணாகரன், ராஷிகண்ணா, மஞ்சிமா மோகன்
தயாரிப்பு: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார்
இசை: கோவிந்த் வசந்தா
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா
இயக்கம் : டெல்லி பிர்சாத் தீனதயாள்
தனது தங்கை மஞ்சிமா மோகனுடன் வசிக்கிறார் விஜய் சேதுபதி. அரசியலில் ஈடுபட்டு பெரியாளாக வரவேண்டும் என்று எண்ணுகிறார். அதற்காக தனது ஏரியாவுக்கு வரும் அரசியல்வாதி பார்த்திபனுடன் சேர முயன்று விடாமுயற்சியில் சேர்ந்தும் விடுகிறார். பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றியும் பெறுகிறார். இந்நிலையில் அந்த பகுதியை கார்ப்பரேட் நிறுவனத்துக்கு எழுதி கொடுக்கிறார். அதற்காக பார்த்திபன் பெரும் தொகை கையூட்டாக பெறுகிறார். திடீரென்று பணம் காணாமல் போகிறது. இந்நிலையில் தலையில் அடிபட்டதால் அடிக்கடி விஜய் சேதுபதி குணம் மாறுகிறது. கார்ப்பரேட் விவகாரம் வெளியில் தெரிந்ததும் மக்கள் எதிர்ப்பு கிளம்புகிறது. இந்த குழப்பங்களுக்கு விடை சொல்கிறது துக்ளக் தர்பார்.
பெரிய அரசியல் விவகாரமாக இருந்தாலும் சிறிய கவுன்சிலர் விவகாரமாக இருந்தாலும் சமீபத்திய கதைகளில் கார்ப்பரேட் கம்பெனி களின் தோலுரிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்த படத்திலும் அதுவே நடந்திருக்கிறது. இதற்கிடையில் பெரிய அரசியல்வாதி பார்த்திபன், கவுன்சிலர் விஜய் சேதுபதிக்கு இடையே நடக்கும் அரசியல் ரேஸ்கள் சுவாரஸ்யம்.
வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்தாலே அரசியல் கெட்டப் வந்துவிடும் பார்முளா இந்த படத்திலும் தவறாமல் இடம் பிடித்திருக்கிறது. விஜய் சேதுபதி திடீரென ஸ்பிளிட் பர்சனாலிட்டி போல் நடந்துக் கொள்வது வேடத்தில் சிறு மாறுதலை காட்டுகிறது. மற்றபடி வழக்கம்போல் யதார்த்தமாக பேசி தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஜய் சேதுபதி.


அரசியல்வாதியாக நக்கல் நய்யாண்டி செய்வதெல்லாம் பார்த்திபனுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை சும்மா ஜமாய்த்திருக்கிறார். அதேபோல் சில நிமிடங்களே வந்தாலும் பெயரை தட்டிச் செல்கிறார் சத்யராஜ்.
ஹீரோயின் ராஷிகண்ணா அழகாக வந்து செல்கிறார். மஞ்சிமா மோகனுக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை.
பெரிய நடிகர்களுக்கு மத்தியில் காணாமல் போய்விடாமல் தனது சிறப்பான நடிப்பால் மனதில் இடம் பிடிக்கிறார் கருணாகரன்.
அரசியல் கதை என்றாலும் உள்ளூர் அளவில் கதைக்களத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள். திரைக்கதையில் திருப்பங்கள் கைகொடுத் திருக்கிறது.
சிந்தாமல் சிதறாமல் காட்சிகளை படமாக்கி இருக்கிறது மனோஜ் பரமஹம்சாவின் கேமரா. கோவிந்த் வசந்தா இசை நலம்.
துக்ளக் தர்பார்- அந்நியன், அமாவாசை கலந்த கலவை.

Leave A Reply

Your email address will not be published.