உடன்பிறப்பே (திரைப்பட விமர்சனம்)

5

படம்: உடன்பிறப்பே

நடிப்பு: சசிகுமார், சமுத்திரக்கனி, ஜோதிகா, நரேன், கலையரசன், சூரி, சிஜாரோஸ், சித்தார்த், நிவேதிதா சதிஷ்,  வேல்ராஜ், வேல ராமமூர்த்தி, தீபா,  நமோ நாரயணன்,

ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ்

இசை: டி.இமான்

தயாரிப்பு: ஜோதிகா, சூர்யா (2டி எண்ட்ர்டெயின்மெண்ட்)

இணை தயாரிப்பு: ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன்

இயக்கம்: இரா சரவணன்

சசிகுமார், ஜோதிகா அண்ணன் தங்கை. ஜோதிகாவின் கணவர் சமுத்திரக்கனி. சசிகுமார் அடிதடி செய்து மற்றவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கிறார். இது சமுத்திரக்கனிக்கு பிடிக்காததால் அவருடன் சண்டை போடுவிட்டு மனைவியுடன் தனியாக வாழ்கிறார். ஆசிரியரான சமுத்திரக்கனி எதுவும் சட்டப்படி நடக்க வேண்டும் என்று சொல்கிறார். ஊரில் தண்ணீர் விற்பனைக்காக நிலத்தில் போர் போட வரும் கலையரசன் மீது வழக்கு போட்டு தடை பெறுகிறார் சமுத்திரக்கனி..  இந்நிலையில் சசிகுமாரின் மகன் ஊரிலிருந்து வருகிறான். அவனுக்கு தனது மகளை கட்டித்தர ஜோதிகா எண்ணுகிறார். ஆனால் அதை சமுத்திரக்கனி ஏற்க மறுக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் சசிகுமாரின் மகனுக்கு மகளை தர வேண்டிய சூழலுக்குள்ளாகிறார் சமுத்திரக்கனி. இந்நிலையில் சமுத்திரக்கனியின் மகள் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடுகிறார். சசிகுமார் மீது இருக்கும் கோபத்தில்தான் யாரோ ரவுடிகள் தன் மகளை குத்திவிட்டதாக சமுத்திரக்கனி எண்ணுகிறார். அவரை போலீசில் பிடித்து தர துடிக்கிறார். இறுதியில் நடப்பது என்ன என்பதை குடும்ப சென்டிமென்ட்டுடன் கிளைமாக்ஸ் விளக்குகிறது.

குடும்ப படங்கள் வருவது அத்திப்பூப்பதுபோலாகி விட்டது. அந்த வரிசையில் ஒரு அத்தி அண்ணன் தங்கை பாசத்துடன் உடன்பிறபே என்ற பெயரில் பூத்திருக்கிறது. குடும்ப கதையில்  ரசிகர்களை ஒன்றச் செய்வது என்பது குதிரைக்கொம்பான விஷயம் அதை கச்சிதமாக செய்து ரசிகர்களை தொடக்க காட்சி முதலே படத்தில் ஒன்றச் செய்திருக்கிறார் இயக்குனர் இரா சரவணன்.

மாதங்கி என்ற கிராமத்து பெண் அம்சத்துக்கே உரியா பண்புகளுடன் கதாபாத்திரத்தில் ஊறிப்போய் நடித்திருக்கிறார் ஜோதிகா. இது இவர் நடிக்கும் 50வது படம். ஸ்டைல் காட்டும், திமிர் காட்டும், கண்டிப்பு காட்டும் ஜோதிகாவைத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம் ஒரு கிராமத்து அம்மணியாக முதன்முறையாக முத்திரை பதித்திருக்கிறார் ஜோதிகா.

மாதங்கி பாத்திரத்தை ராதிகா ஏற்றிருந்தால் எப்படி அந்த கதாபாத்திரத்தை உணர்ச்சிப்பூர்வமாக மாற்றியிருப்பரோ அதை ஜோதிகா செய்திருப்பது அவரது நடிப்பின் பக்குவத்தை வெளிப்படுத்துகிறது. தன் அண்ணன் சசிகுமார் பற்றி கணவர் சமுத்திரக்கனி குத்திக்காட்டி பேசும்போதெல்லாம் அவர் மீது  லேசாக கோபத்தை காட்டுவதும் அண்ணன் சசிகுமாரை காணும்போதெல்லாம் கண்கள் நிறைய பாசத்தை வெளிப்படுத்தியும் நடிப்பை உணர்ச்சிபிரவாகத்துடன் கொட்டி இருக்கிறார்.

சசிகுமார் கொஞ்சம் முதிர்ச்சியான தோற்றத்தில் வந்தாலும் நடிப்பில் கம்பீரத்தை காட்டி கலக்குகிறார். நாய் மீது கார் ஏற்றிய ரவுடிகளை நெய்ய புடைப்பதும் மிரட்டல் விடும் ரவுடிகளை அசால்ட்டாக மிரட்டி விரட்டுவதுமாக தடாலடி வேலைகள் செய்கிறார்.

ஆசிரியராக வரும் சமுத்திரக்கனி எதற்கெடுத்தாலும் சட்ட,ம் பேசி நியாயம் பார்ப்பது கதாபாத்திரத்தின் தீவிரத்தை உணர்ந்து நடிக்கும் செயல். சில இடங்களில் அவர் பேசும் சட்டப்படியான நியாயத்தை ரசிகர்கள்  ஆமாம் இவர் இப்படித்தாய்யா என்று நக்கலடிக்கவும் செய்கிறார்கள்.

வந்தோமா, காமெடி செய்தோமா என்றில்லாமல் குடும்ப சுமைகளையும் சுமந்து கண்ணீர் சிந்தி நடித்து கவர்கிறார் சூரி.  தன் வீட்டில் சூரியை  சாப்பிட வைத்து அவரை சமுத்திரக்கனி போலீசில் மாடிவிட்டதும் சூரி புலம்பும் புலம்பல் குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஆர்.வேல்ராஜ் கண்டிப்பு காட்டி நடித்திருக்கிறார்.

அண்ணன் தங்கை குடும்ப  சென்டிமென்ட்டில் கொஞ்சம் கிரைம், ஆக்‌ஷன், நகைச்சுவை கலந்து கமர்ஷியல் படமாக வழங்கி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் இரா சரவணன்.

ஆர்.வேல்ராஜின் கேமிரா கிராமத்து அழகை வானத்திலிருந்து படமாக்கி விருந்து படைக்கிறது டி.இமான் இசையில் பாடல்கள்  தாலாட்டுகிறது.

உடன்பிறபே- உள்ளங்களை உருகவைக்கும்.

 

 

Leave A Reply

Your email address will not be published.