வனம் (திரைப்பட விமர்சனம்)

10

படம் :வனம்
நடிப்பு : வெற்றி, ஸ்மிருத்தி வெங்கட், அனுசித்ரா, வேல ராமமுர்த்தி, அழகம் பெருமாள், பிரதிப், தேசிங்கு ராஜா, ஜே. பி. அலெக்ஸ்

தயாரிப்பு : கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜே. பி. அமலன்,

இசை :ரான் ஈத்தன்

ஒளிப்பதிவு :விக்ரம் மோகன்

இயக்கம் : ஸ்ரீ கண்டன் ஆனந்த்

மறுஜென்ம கதைகள் பார்க்கவே ரொம்ப ஆர்வமாக இருக்கும். அந்த வகையில் ஆர்வத்தை அதிகரிக்கும் மறுஜென்ம  கதையாக வனம் உருவாகியிருக்கிறது.

பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் தப்பி ஜமீன்தாராக வாழ்ந்து வரும் வேல ராமமூர்த்தி பெண்களை தனது பள்ளியறை பாவைகளாக பயன்படுத்துகிறார். தன் பெயர் காலத்துக்கும் நிலைத்து நிற்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் வாழும் பகுதியிலிருந்து அவர்களை விரட்டிவிட்டு அங்கு கல்விச் சாலை அமைக்க முடிவு செய்கிறார். அந்த இடத்துக்கு செல்லும்போது அங்கிருக்கும் மல்லி என்ற அழகு பெண்னை பார்த்து அவளை அடைய எண்ணுகிறார் ஜமீன்தார்.  கர்ப்பிணி என்றும் பாராமல் அவளை சீரழிப்பதுடன் கொலையும் செய்கிறார். இறக்கும் தருவாயில் மீண்டும் பிறந்து வந்து உன்னை பழிவாங்குவேன் என்று மல்லி சபதம் ஏற்கிறாள். மறு ஜென்மத்தில் அவர்கள் பிறந்தார்களா? யார், யார் என்னென்ன ஜென்மம் எடுத்தார்கள் என்பதை படம் சுவராஸ்யமாக விளக்குகிறது.

இப்படத்தின் நாயகனாக வெற்றி நடித்திருக்கிறார். அமைதியான நடிப்பில் கவர முயற்சிக்கும் அவர் மாணவர் விடுதியில் தங்கி சிற்ப கலை பயிலும் மாணவராக வேடமேற்றிருக்கிறார். அவர் இருக்கும் அறையில் உள்ள நண்பர்கள் மர்மமான முறையில் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். தனக்கும் அதே கதி ஏற்படுமமோ என்று பயந்து அங்கு நடக்கும் மர்ம தற்கொலைகளுக்கான காரணத்தை பற்றி ஆராயும்போதுதான் ஜமீன்தார் கதை பிளாஷ் தொடங்குகிறது.

வெற்றி மறுஜென்மம் பற்றிய ரகசியத்தை தனது கல்லூரி முதல்வர் அழகம் பெருமாளிடம் சொன்ன பிறகு  காட்சிகள் சூடு பிடிக்கிறது. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருமே மோதிக்கொள்ளும் சூழல் ஏற்படுவதும் அதற்கான திரைக்கதையை லாவகமாக இயக்குனர் இணைத்திருப்பதும் அப்ளாஸ் பெறுகிறது.

வனவாழ் பெண் மல்லியாக வரும் அனுசித்ரா அழகோவியமாக பிரதிபலிக்கிறார். ஹீரோயின் ஸ்மிருத்தி வெங்கட் கதைக்கும் சஸ்பென்சுக்கும் உதவியிருக்கிறார்.

ரான் ஈத்தன் இசையும்,  விக்ரம் மோகனின் ஒளிப்பதிவும் முன்ஜென்மம், மறுஜென்மத்துக்கு வித்தியாசம் காட்டி காட்சிகளை அழகாக்கி இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நடக்கும் வெற்றி, அழகம் பெருமாள் மோதல் அசத்தலாக படமாகி இருக்கிறது.

வனம்- எதிர்பாராத இன்ப ஷாக்

 

Leave A Reply

Your email address will not be published.