இயக்குனர் வி.செ.குகநாதன் அறிக்கை

2

திரைப்பட இயக்குனர் வி.செ.குகநாதன் கூறியிருப்ப தாவது:

என் வணக்கத்துக்குரிய
தமிழ்ச் சொந்தங்களே…

உலகெலாம் பரவி வாழும்
என் ரத்த உறவுகளே…

அறிவுக்கு படிப்பது பாடம்;
அதில் அரசியல் கலப்பது பாவம்..

குடியரசு என்றால் குடிமக்களின் அரசு அல்லது மக்களாட்சி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், எப்படி ஆட்சி நடத்தவேண்டும் என்பதை நிர்ணயிப்பதே அரசியல் சட்டம். அந்த சட்ட வடிவை ஏற்றுக் கொண்ட நாள்தான் குடியரசு தின விழாவாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

இந்த விழா மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் இணைந்து கொண்டாடுகின்ற ஒரு விழா. இதில் எவரையும் தகுதி நீக்கம் செய்யவோ புறம் தள்ளி வைக்கவோ ஒன்றிய அரசுக்கு ஒரு போதும் அதிகாரம் கிடையாது.

தமிழக அலங்கார ஊர்திகள் பங்கேற்க முடியாது என இன்றைய ஒன்றிய அரசு முடிவெடுத்தன் மூலம், தமிழகத்துக்கு ஒரு மாபெரும் தவறு இழைத்து இருக்கிறது. இதனை ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தமிழச்சியும் தனக்கு நேர்ந்த அவமானமாக கருத்தில் கொள்ளல் வேண்டும்.

இந்த தவறு தெரிந்தே செய்யப்பட்டிருந்தால்,
நமது மாநில சுயாட்சி போராட்டத்தை கையில் எடுக்கவும், மத்தியில் கூட்டாட்சியை நடைமுறைப்படுத்தவும் மறைமுகமாக ஒன்றிய அரசு நமக்கு அனுமதி வழங்கியுள்ளதாக கருத வேண்டியதிருக்கிறது.

நமது மாநில முதல்வர்,
ஒன்றிய அரசு உதாசீனப்படுத்திய அலங்கார ஊர்திகளை தமிழக அரசின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள வைப்பதுடன், தமிழகம் முழுவதும் அதனை வலம் வர வைப்பது என்ற அசத்தலான முடிவை எடுத்துள்ளார்.

இது தைரியமான முடிவு.
ஒவ்வொரு தமிழனின் தன்மானத்தையும் தலை நிமிரச் செய்யும் உணர்வுபூர்வமான முடிவு.

அலங்கார ஊர்தியில் இடம்பெற்ற வீரமங்கை வேலுநாச்சியார், வ உ சி, பாரதியார் ஆகியோர் தமிழ் நாட்டு சுதந்திரத்திற்காக மட்டுமே போராடியவர்கள் அல்ல. இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக தன் இறுதி மூச்சு வரை போராடியவர்கள்.

அதனை ஒன்றிய அரசு தகுதி நீக்கம் செய்வது தமிழக அரசுக்கு மட்டும் ஏற்பட்ட அவமானமாக கருதி கொள்ளக்கூடாது. அது ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்பட்ட அவமானம்.

ஜாதிகளை மறந்து,
மதங்களை மறந்து,
கட்சிகளை மறந்து,
குடியரசு தினத்தன்று காலை,
தமிழர்கள் வாழும் ஒவ்வொரு இல்லங்களிலும், கைபேசிகளிலும்,
ஏனைய ஊடகங்களிலும் ஆயிரக்கணக்கில் அல்ல, கோடிக்கணக்கில்,
ஒன்றிய அரசு ஒதுக்கி வைத்த நமது தியாகிகளின் படங்களை வெளியிட்டு, தமிழர்களின்
வீர உணர்வுகளை நாம் வெளிப்படுத்த வேண்டும்.
நமது தமிழக முதல்வரின் கரங்களை நாம் வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு வி..செ. குகநாதன் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.