வீணை எஸ். பாலசந்தர் பிறந்த நாள் இன்று

1

வீணை எஸ் பாலசந்தர் பிறந்தநாள் இனறு.

நாடெங்கும் புகழ்பெற்ற வீணை இசைக் கலைஞராகவும், தமிழ் திரையுலகின் சிறந்த இசையமைப் பாளராக, இயக்குநராக, பாடகராக என பன்முகப் பரிமாணம் கொண்டவர்தான் எஸ்.பாலசந்தர்

இவர் பிரமாதமாக வீணை வாசிக்கக்கூடியவர். வெளிநாடுகள் பலவற்றிற்கு சென்று வீணைக் கச்சேரி செய்திருக்கிறார். அந்தக் கச்சேரிகளை பார்த்தவர்கள் இவர் சினிமாவின் இயக்குனர் என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். அந்தளவிற்கு அதில் ஒன்றிப் போகக் கூடியவர்.

இன்று நிறைய பேர் இயக்குனர், இசையமப்பாளர், எடிட்டர் என்று பலவற்றையும் ஒருவரே செய்கி றார்கள். இதற்கு முன்னோடி இவரே. இவர் ஒரு நடிகர், இயக்குனர், திரைக்கதையாளர், எடிட்டர், இசையமைப்பாளர், தபேலா, சிதார், ஷெனாய், வீணை வாசிக்கத் தெரிந்த ஒரே கலைஞர் இவர்தான். இதுபோக பாடகர், ஒளிப்படக் கலைஞர், பாடலாசிரியர், பாடகர், செஸ் விளையாட்டு வீரர் என்று ஏகப்பட்ட திறமைகள் கொண்டவர்.

சினிமாவில் பல புதுமைகளை செய்த இந்தக் கலைஞன் தனது சினிமா அனுபவத்தை இப்படி சொல்கிறார்.

“*நான் முற்பிறவியில் கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனால் வீணை கிடைத்தது. நிறைய பாவம் செய்திருக்க வேண்டும். அதனால் சினிமா வாய்த்தது*” என்றார்.

இப்படிப்பட்ட உன்னதக் கலைஞனை இன்றைய தலைமுறை சுத்தமாக மறந்து விட்டது வேதனையான ஒன்று.

பாலச்சந்தர் இயக்கிய ’*பொம்மை*’ படம் குறித்து சில வரிகள்:

இன்றைக்கு ஒருநாளில் முடியும், அதாவது 24 மணி நேரத்தில் முடியும் கதைகளைக் கொண்ட படங்கள் வெளிவருகின்றன. அதற்கு முன்னோடி இவர்தான். 1964-ல் வெளிவந்த ‘பொம்மை’ படம் ஒரு நாளில் நடக்கும் நிகழ்சிகளைக் கொண்டது. ஒருவரைக் கொல்ல பொம்மைக்குள் வெடிகுண்டு வைக்கிறார்கள். அந்த பொம்மை கைமாறிப் போய்விடுகிறது. அதை தேடி அலைவதுதான் கதை. சஸ்பென்சாக செல்லும் இந்த படத்தில்தான் கே.ஜே.ஜேசுதாஸ் என்ற உன்னதக் கலைஞனை பாலசந்தர் அறிமுகப்படுத்தி இருப்பார். இந்தப் படத்தில் வரும் ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்ற பாடல்தான் ஜேசுதாசின் முதல் பாடல்.
இந்தப் படத்தின் இறுதியில் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களையும் வீணை எஸ். பாலசந்தர் அறிமுகப்படுத்துவார். அதில் ஒரு கல்லூரி மாணவனைப்போல் ஜேசுதாஸ் நிற்பார். இன்று வரை வேறுயாருமே செய்யாத வித்தியாசமான முயற்சி இது.

தமிழில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் படம் ‘*அந்த நாள்*’ . பிளாஷ் பேக் உத்தியை அதிகம் பயன்படுத்தி கதையை நகர்த்திய முதல் படமும் இதுதான். தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த இந்தப் படத்தை இயக்கும்போது இவரின் வயது 27. வித்தியாசமான படம். இவரது படத்தில் வரும் திரைக்கதையும், காட்சிக் கோணமும் பிரமிக்க வைப்பவை. அதனால் தான் இயக்குனர் மகேந்திரன் தனது குருநாதராக வீணை எஸ். பாலச்சந்தரைக் குறிப்பிடுகிறார்.

‘*நடு இரவில்*”

இவர் இயக்கிய ‘நடுஇரவில்’ படம் இன்றைக்கும் த்ரில்லர் படத்தின் உச்சமாக சொல்லப்படுகிறது. குறை காணமுடியாத திறமையான படங்களை தருவதில் வீணை எஸ். பாலச்சந்தருக்கு இணையாக ஒருவரை தமிழ் திரையுலகில் காணமுடியாது.

Leave A Reply

Your email address will not be published.