வேலன் (திரைப்பட விமர்சனம்)

24

படம்: வேலன்

நடிப்பு: பிரபு, சூரி, முகேன், மீனாட்சி, மரியா, தம்பி ராமையா,  ஹரிஷ் பெராடி, ராகுல், பிரிகிடா, ஜோ மல்லூரி, பில்லி முரளி, ஸ்ரீரஞ்சனி,

இசை:கோபி சுந்தர்

ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன்

தயாரிப்பு: கலைமகன் முபாரக்

இயக்கம்: கவின்

சிறுவயதில் பிரபு மீது ஹரிஷ் பெராடிக்கு ஏற்பட்ட பழிவாங்கும் குணம் பெரியவரான பிறகும் தொடர்கிறது. இந்நிலையில் பிரபு மகன் வேலனுக்கு  மீனாட்சி மீது காதல் பிறக்கிறது. அவருக்கு காதல் கடிதம் கொடுக்கிறார். காதல் கடிதத்தை எடுத்துக்கொண்டு கோபமாக வரும் தம்பி ராமையா அதை பிரபுவிடம் காட்டி நியாயம் கேட்கிறார். மகனுக்காக அந்த காதலுக்கு மறுப்பு சொல்லாமல் திருமண நிச்சயதார்த்தத்துக்கு  உறுதி தருகிறார். பிறகுதான் தான் காதலித்த பெண் தம்பி ராமையா மகள் இல்லை அவர் வேறுபெண் என்று வேலனுக்கு தெரியவருகிறது. ஆனாலும் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தம்பி ராமையா மகளை திருமணம் செய்ய சம்மதிக்கிறார். எப்படியாவது பிரபுவின் குடும்பத்தை பழி வாங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் ஹரிஷ் பெராடி இந்த சமயத்தை பயன்படுத்தி தம்பி ராமையா மகளை தன் மகனுக்கு கட்டி வைக்க முடிவு செய்கிறார். பெரிய இடம், அரசியல் பதவி என்ற ஆசை வார்த்தைக்கு மயங்கி தனது மகளை ஹரிஷ் மகனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார் தம்பி ராமையா. தந்தையின் வாக்கை காப்பாற்ற தம்பி ராமையா மகளை தானே மணக்க எண்ணும் பிரபு மகன் வேலன் அதிரடியாக புகுந்து திருமணத்தை தடுக்கிறார். இதன் முடிவு என்னவாகிறது என்பதை படம் விளக்குகிறது.

தமிழும் மலையாளமும் கலந்து வந்திருக்கும் படம் நட்சத்திரங்களும் இருமொழி கலப்புதான். மீனாட்சி மலையாளப் பெண் என்பதால் அவருக்கு மலையாளத்தில் எழுதிய காதல் கடிதம் தருகிறார் ஹீரோ முகேன். அந்த கடிதம்தான் கதையை கிளைமாக்ஸ் வரை நகர்த்தி செல்கிறது.

பழனிச்சாமி என்ற கதாபாத்திரத்தில் கெத்து காட்டி நடித்திருக்கிறார் பிரபு. கோபத்துடன் வரும் தம்பி ராமையா பிரபுவின் சொத்துக்களை பார்த்ததும் பெட்டிப்பாம்பாக அடங்கி பிரபு சொல்வதுபோல் மகளை திருமணம் செய்துகொடுக்க சம்மதம் தெரிவித்துவிட்டு வருவதும் ரசிக்க வைக்கிறது.

தான் காதலிக்கு பெண் தம்பி ராமையா மகள் இல்லை என்று அறிந்ததும் அதிர்ச்சி அடையும் முகேன் அதை தம்பி ராமையாவிடம் சொல்லி புரியவைக்க முயல்வதும் கூடவே தம்பி ராமையாவின் மச்சனன் சூரியையும் சாட்சிக்கு அழைத்துச் சென்று மொக்கை வாங்குவதுமாக கலகலப்பாக படம் நகர்கிறது.

ஒரு கட்டத்தில் தன் தந்தை நிச்சயம்செய்த பெண்ணையே திருமணம் செய்துக்கொள்ள உண்மை காதலியையே ஒதுக்கிவிடும் முகேன் மாறுபட்டு நிற்கிறார். பிரபுவை தாக்கிய ஹரிஷ் பெராடியின் கல்யாண வீட்டில் புகுந்து அடிதடியில் இறங்கும் முகேன் ஹீரோயிசம் காட்டாமல் அடக்கி வாசித்திருக்கிறார். அங்கு வரும் பிரபு மகனை தாக்கும் அடியாட்களை துவம்சம் செய்து அப்ளாஸ் பெறுகிறார்.

சூரி முறைமாமனாக வந்து காமெடி செய்கிறார். தன் முறைபெண்ணை முகேன் காதலிப்பதாக எண்ணி குழுறுவதும் அவர் காதலிக்கவில்லை எனத் தெரிந்ததும் முகேனின் திட்டங்களுக்கு சப்போர்ட் செய்வதுமாக நடித்து கலகலப்பிலும்,  சென்ட்டிமென்ட்டிலும் கவர்கிறார்.

கலைமகன் முபாரக் தயாரித்திருக்கும் இப்படத்தை காதல், மோதல் கலந்து இயக்கி இருக்கிறார் கவின்.

கிராமத்து பாங்காக காட்சிகள் ஒளிப்பதிவு செய்து கண்களுக்கு குளிர்ச்சி தருகிறார் கோபி ஜெகதீஸ்வரன். கோபி சுந்தர் இசை ஒகே.

வேலன் – பொழுதுபோக்கு கலகலப்பு காதல் சென்டிமென்ட்.

Leave A Reply

Your email address will not be published.