பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்!

1

கோலிவுட் என்றழைக்கப்படும் நம் தமிழ் திரையுலகின் பழம்பெரும் நகைச்சுவை, குணச்சித்திர நடிகையான ரங்கம்மா பாட்டி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 87.

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் தெலுங்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் கே.ஆர். ரங்கம்மா என்ற ரங்கம்மா பாட்டி. சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக, மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர், எம்.ஜி.ஆரின் ‘விவசாயி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய் உட்பட பல நடிகர்களின் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

நடிகர் வடிவேலுடன், ரங்கம்மா பாட்டி இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக, ‘கி.மு.’ திரைப்படத்தில் இவரும், வடிவேலும் சேர்ந்த நடித்த நகைச்சுவையான ‘போறது போற அந்த நாயை சூனு சொல்லிட்டு போ’ எனக் கூறும் நகைச்சுவை, பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இதேபோல், வடிவேலுவுடன், ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் பேய் பிடித்த பாட்டியாக, இவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

சுமார் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரங்கம்மா பாட்டி, ‘சூரியகாந்தி’ படத்தில், கண்ணதாசனின் பிரபல பாடலான, ’பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது’ என்ற பாடல் காட்சியில் ஜெயலலிதா அருகில் அமர்ந்திருப்பார். ‘குட்டிமா’ என்ற குறும் படத்திலும் இவர் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக, வாய்ப்பில்லாமல் வறுமையில் இருந்தார். இதனால், கடந்த 2018-ம் ஆண்டு மெரினா கடற்கரையில் கர்சீப், சோப்பு, பொம்மைகள் விற்று வந்தார். தனக்கு நடிகர் சங்கம் உதவ வேண்டும் என்றும் அப்போது கோரிக்கை விடுத்ததை அடுத்து சில நடிகர்கள் அவருக்கு உதவி செய்தனர்.

இந்நிலையில், வயது மூப்பு மற்றும் வறுமை காரணமாக, அவருடைய சொந்த ஊரான, தெலுங்குப்பாளையத்துக்குச் சில வருடங்களுக்கு முன் சென்றார். அங்கு கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த அவர், இன்று காலமானார். அவர் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.