விக்ரம்- விமர்சனம்!

8

டிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா மற்றும் பலர்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

ஓளிப்பதிவு கிரீஸ் கங்காதரன்

இசை அனிருத்

தயாரிப்பு: ராஜ் கமல் பிலிம்ஸ்

போலீஸ் டிப்பார்ட்மெண்டில் ஒர்க் செய்யும் கமலின் வளர்ப்பு மகன் காளிதாஸ் ஜெயராம் கையில் போதைக் கடத்தல் கும்பல் ஒன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களுடன் பிடிபடுகிறது. இதையடுத்து அந்த கடத்தல் செய்யும் முகமுடி கும்பல் காளிதாஸையும் தொடர்ந்து சில போலீஸ்காரர்களையும் கும்பல் கொலை செய்து விட்டு தப்பி ஓடுகிறது.  கூடவே அந்த கும்பல் கமலையும் கொலை செய்யப்படுவது போல் காட்டுகின்றனர். அந்த கொடூர முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டான பகத் பாசிலை களமிறக்குகிறது போலீஸ். இந்த தொடர் கொலைகள் பற்றி விசாரிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்கள் பகத் பாசிலுக்கு கிடைக்கிறது. வரிசையாக போலீஸ்காரர்களை கொல்லும் அந்த முகமுடி கும்பல், போலீஸ் அல்லாத கமலை ஏன் கொலை செய்கிறார்கள் என விசாரிக்கும் போது தான் பகத் பாசிலுக்கு திடுக்கிடும் தகவல் தெரிய வருகிறது. அது என்ன? அந்த முகமுடி கும்பல் யார் என்பதை பகத் பாசில் எப்படி கண்டரிகிறார் என்பது போன்ற விபரங்களை விறுவிறுப்பாக சொல்லி உள்ள படம் தான் இந்த விக்ரம்.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கமல், முதல் பாதியில் கர்ணனாகவும், இரண்டாம் பாதியில் விக்ரமாகவும் நடித்திருக்கிறார். அதிலும் குடிகாரன், மகனை நினைத்து கவலைப்படும் பாசமான தந்தை. பேரனை நினைத்து ஏங்கும் தாத்தா என நடிப்பில் வழக்கம் போல் பளிச்சிடுகிறார். குறிப்பாக ‘பத்தல பத்தல’ என்ற ஆட்டம் தொடங்கி, அடுத்தடுத்து அதிரடி செய்யும் ஆக்ஷன் என்ன, எந்தெந்த காட்சிகளில் எப்படி நடித்தால் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற மிகப் பெரிய ரெபரன்ஸையே இந்தப் படத்தில் மீண்டும் கொடுத்துவிட்டார். சக நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் தன் படத்தில் சரியான இடத்தைக் கொடுத்து கோலிவுட்டின் ஆண்டவர்-டா என்று உரக்க சொல்ல வைத்து விடுகிறார்

கமலுக்கு அடுத்தபடியாக பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறார் பகத் பாசில். சீக்ரெட் ஏஜெண்ட்டாக வந்து முதல் பாதி முழுவதும் திரைக்கதையை தன் வசப்படுத்தி இருக்கிறார். சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிக்க வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. போதைப் பொருள் வியாபாரியான இவர், மகேஸ்வரி, மைனா நந்தினி, சிவானி என 3 பொண்டாட்டிகளுடன் மஜாவாக வாழ்ந்து வரும் சந்தானம் என்ற ரோலில் நடித்து அசத்தி இருக்கிறார்.. தனக்கே உரிய பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் நரேன். சூர்யாவின் மாஸ் சீன் தியேட்டரில் விசில் பறக்கிறது.

பின்னணி இசையில் அனிருத்தின் அபாரமான உழைப்பால் தெறிக்கிறது. கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு -பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதாகத் தான் இருக்கும் சூழலில் ஹாலிவுட் தரத்தில் நேர்த்தியான லைட்டிங்கால் வாவ் சொல்ல வைக்கிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமலின் ரசிகனாக இந்த படத்தை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். பகத் பாசில், கமல், விஜய் சேதுபதி என 3 மிகப்பெரிய நடிகர்கள் இருந்தாலும், அவர்களுக்கு சமமான வேடங்கள் கொடுத்து, அவர்களது கதாபாத்திரங்களை கையாண்டுள்ள விதம் சிறப்பு. ஒரு படி மேலாக சொல்வதானால் கோலிவுட்டில் இப்படி ஒரு திரைக்கதையை அண்மைக் காலத்தில் பார்த்திருப்போமா என்று யோசனை செய்ய வைத்து விட்டதென்னவோ நிஜம். அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு என மூன்று மணி நேரம் ஓடுவதே தெரியவில்லை. தமிழ் சினிமாவுக்கு புதுசான் போதை பொருளை மையமாக வைத்து ஆக்ஷன், சென்டிமென்ட், பழிக்கு பழி என திரைக்கதை அமைத்து சபாஷ் பட்டம் வாங்குகிறார் லோகேஷ் கனகராஜ்

மொத்தத்தில் ‘விக்ரம்’ வியக்க வைக்கிறான்.!

Leave A Reply

Your email address will not be published.