விக்ரம் ஆல் டைம் ரிக்கார்ட் சக்சஸ் மீட் ஹைலைட்ஸ்!

1

லோகேஷ் கனகராஜ் இயக்கத்துல கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இந்தப் படம் வசூலில் பெரிய சாதனைகள் படைத்தததைக் கொண்டாடும் விதமாக படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், படத்தை வெளியிட்ட உதயநிதி, செண்பக மூர்த்தி, கோபுரம் சினிமாஸ் அன்புசெழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அனிருத் பேசும் போது, “விக்ரம் தொடங்கியதில் இருந்தே ஒரு நேர்மறையான உணர்வு இருக்கிறது. அதுதான் இவ்வளவு வெற்றியை கொடுத்திருக்கிறது. கேரளாவில் ஒருவர் கமல் உங்களுக்கு என்ன கிஃப்ட் கொடுத்தார் எனக் கேட்டார், விக்ரம் கொடுத்ததே கிஃப்ட் தான். படத்தின் பின்னணி இசையை வெளியிட சொல்லி கேட்கிறார்கள். அது தயாராகிவிட்டது விரைவில் வெளியிடுவோம்.” எனக் கூறினார்.

கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் பேசும் போது “கமல் சார் பணத்திற்கு ஆசைப்பட்டதில்லை. ஆனால் இந்தப் படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என விரும்பினார். மற்ற மொழிப் படங்கள் பெரிய வசூல் செய்யும் போது அதை ஒரு தமிழ்ப்படம் செய்யவில்லை என்ற ஏக்கத்தை தீர்த்திருக்கிறது விக்ரம்” எனக் கூறினார்.

உதயநிதி பேசும்போது, “டான் படத்தின் வெற்றிவிழா போலவே இங்கும் சில உண்மைகளை சொல்கிறேன். இந்தப் படத்தை கமல் சார் முதலில் எங்களுக்குப் போட்டுக்காட்டினார். பார்த்து மிரண்டுவிட்டோம். இந்தப் படத்தைப் பற்றி முதல் ட்வீட் போட்டது நான்தான் என்பது பெருமையாக இருக்கிறது. படத்தின் எம்ஜி வாங்காமல் விட்டுவிட்டோம் என செண்பக மூர்த்தி கவலைப்பட்டார். அனிருத் கூட அடுத்த படத்தில் இருந்து படத்தின் ஏரியா உரிமையை வாங்கிக் கொள்வோமா என்று கேட்டார். இந்தப் படத்தை இதுவரை 7 முறை பார்த்துவிட்டேன். அந்த அளவு தாக்கம் கொடுத்துள்ளது. இந்தப் படம் ஒரு ட்ரெய்ன் என்றால் கடைசி பயணி நான் என்று சொன்னேன். மன்னிக்கவும் இது ட்ரெய்ன் இல்லை ராக்கெட். தமிழ்நாடு விநியோகஸ்தராக கூறுகிறேன் இதுவரை ஷேர் மட்டும் 75 கோடி கிடைத்துள்ளது. இதுவரை எந்தப் படமும் இந்த சாதனையை செய்ததில்லை” என்றார்.

லோகேஷ் பேசுகையில், “இந்தப் படத்துக்காக எல்லா சலுகையையும் கொடுத்த கமல் சாருக்கு நன்றி. படத்தின் கடைசி கட்ட வேலைகளில் நாங்கள் தூங்காமல் வேலை பார்த்தது போல, கமல் சார் ப்ரமோஷனுக்காக அலைந்து கொண்டிருந்தார். வெளிநாடுகளுக்கு படம் சரியான நேரத்தில் சென்று சேர்ந்ததற்கு காரணம் அனிருத் தான். தூங்காமல் படத்தின் வேலைகளை முடித்துக் கொடுத்தார். படம் வெற்றியடைந்ததும் கமல் சார் கூறியது ஒன்றுதான். அடுத்த வேலையை உடனே ஆரம்பி கேப் எடுக்காதே என்று சொன்னார்.” எனக் கூறினார்.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில் “”ஒரு படத்தின் வெற்றிக்கு நான் காரணம் என ஒருவர் சொல்ல முடியாது. சினிமா தெரிஞ்சவங்களுக்கு அது தெரியும். RKFI என்பது நான்கு எழுத்துன்னு நினைச்சுட்டு இருக்கீங்க. அதுக்கு பின்னாடி 40 பேர் இருக்காங்க. முக்கியமா மூணு பேரு. அதுல சந்திரஹாசனையும் டி.என்.எஸ்ஸையும் இழந்திருக்கிறேன். அவர்கள் இடத்தை மகேந்திரனும் டிஸ்னியும் நிரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். பேர் தெரியத் தேவையில்லை என ஒதுங்கி நிற்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சினிமாவில் வேலை கிடைக்கணும் என வந்தவன் நான். நடிப்பதற்காக சினிமாவுக்கு வரவில்லை. அதனைக் காட்டியவர் பாலசந்தர். உங்களை மாதிரி டெக்னீசியன் ஆகணும்னு சொன்ன போது, ‘அட, போடா. ஆட்டோவுக்கு அலையுற. உனக்கு கார் வாங்கி தரேன். நீ நடி. அப்புறம் பாரு’ என என்னை நடிக்க வைத்தவர் பாலச்சந்தர். அவர் படங்களில் மட்டுமே வெவ்வேறு ரோல் பண்ணிட்டு இருந்தா போதும் என இருந்தவனுக்கு பல வெற்றிகளைத் தமிழக மக்களும், தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் கொடுத்திருக்கிறார்கள்.

பத்து வருட காலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் என்னால் வெளியிட முடிந்த ஒரே படம் இதுதான். அதற்குக் காரணம் மகேந்திரன், உதயநிதி ஸ்டாலின். இவர்கள்கூட இருப்பதால்தான் என்னால் தைரியமாக இருக்க முடிந்தது. உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடித்தாலும், பாலிடிக்ஸ் பண்ணினாலும் இதை மட்டும் விட்டுவிடாதீர்கள் எனக் கேட்டு கொள்கிறேன். இத்தனை நேர்மையோடு பட விநியோகத்தை மேற்கொள்வது நிச்சயம் இந்தத் துறைக்கு அவசியம்” என்றார்

இந்த சக்சஸ் மீட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் 40 வகையான விதவிதமான உணவுகளுடன் விருந்து அளிக்கப்பட்டது. விருந்தின் மெனுவில் நாட்டுக்கோழி சூப், முருங்கை கீரை சூப், மாம்பழ ரோல், லிச்சி பழ சந்தேஷ், மட்டன் கீமா உருண்டை, சிக்கன் பிச்சுப்போட்ட வறுவல், வஞ்சரம் மீன் வறுவல், இறால் தொக்கு, மட்டன் சுக்கா, சோள சீஸ் உருண்டை, பன்னீர் டிக்கா, மெக்சிகன் டாகோஸ், ஜலபேனோ சீஸ் சமோசா, கொங்கு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி, கொங்கு ஸ்பெஷல் சைவ பிரியாணி, தால்சா, ரைதா, விருதுநகர் பன் பரோட்டா, சிக்கன் பள்ளிபாளையம் கிரேவி, சைவ பள்ளிபாளையம் கிரேவி, இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா, சைவ குருமா, மதுரை மட்டன் கறி தோசை, முட்டை தோசை, மைசூர் மசால் தோசை, பொடி தோசை, வெங்காய தோசை, கொய்யாக்காய் சட்னி, கோவைக்காய் சட்னி, நிலக்கடலை சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார், சாமை அரிசி தயிர் சாதம், மோர் மிளகாய், மாங்காய் ஊறுகாய், சுக்கு பால், ஐஸ்கிரீம், நறுக்கிய பழங்கள், பீடா என 40 வகையான உணவு பதார்த்தங்கள் இடம்பெற்றன. இந்த விருந்தில் லோகஷ் கனகராஜ் உடன் கமல்ஹாசன் அமர்ந்து சாப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.